July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாத்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம்’

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்த அரசாங்கம், அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் செயற்படக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர்  தின தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அரசு அறிவித்திருந்தது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்து அரசு காலத்தை இழுத்தடிக்குமானால் நாம் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள்,அதற்கு நிதியுதவி வழங்கியவர்கள்,தாக்குதலுக்கு நேரடியாக – மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் போன்றோர் தொடர்பில் விரிவான விசாரணைகளை அரசு நடத்த வேண்டும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டும் – அதை ஆராய இன்னொரு ஆணைக்குழுவை நியமித்தும் காலத்தை வீணடிக்கும் செயலில் அரசு ஈடுபடக்கூடாது.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைத் தண்டிப்போம் எனவும், நீதியைப் பெற்றுத் தருவோம் எனவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியே புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதும் அரசின் பிரதான கடமையாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.