January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல் : ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஆகியோருக்கு தொடர்பு’

“ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரானுடனும் ஏனைய பயங்கரவாதிகளுடனும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக” அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

‘தேசிய பாதுகாப்பை ஓரங்கட்டிவிட்டு நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்தமையே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற காரணம் எனவும் இதற்காக முன்னைய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் அரசியல்வாதிகளை கொண்டு நடத்தப்பட்டதாகவும் அடிப்படைவாதத்திற்காக தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.ஆனால் நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தை காட்டிக்கொடுக்கவும், அடிப்படைவாதத்தை வளர்க்கவுமே முன்னுரிமை கொடுத்தது.

அதுமட்டுமல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமின் கட்சிக்கு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சஹ்ரானின் அணி நேரடியாக உதவிகளை செய்துள்ளது. அதேபோல் சஹ்ரான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவரை பார்க்கவும் ஹக்கீம் சென்றுள்ளார்.

அதுமட்டுமல்ல ரிஷாட் பதியுதீனும் தொடர்புபட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை நடத்தியதே ரிஷாட் என்பதை மறந்துவிட வேண்டாம்.

45 நிறுவனங்கள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது, ரிஷாட் பதியுதீன் தற்கொலை குண்டுதாரியை சந்திக்க சென்றுள்ளார், கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்யக்கோரி அழுத்தம் கொடுத்துள்ளார்.

அடுத்ததாக அசாத் சாலியும் இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டுள்ளார் .தற்கொலைதாரிகளின் தற்கொலை அங்கிகளை விடுவிக்க கோரி அழுத்தம் கொடுத்ததும் அசாத் சாலி என்பது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே இன்று நியாயம் கேட்கும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர். ஆகவே எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு உயரிய தண்டனையை பெற்றுக்கொடுப்போம்” என்றார்.