வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, எதிர்வரும் சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வடக்குக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
முதல் கட்டமாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட உயர்ஸ்தானிகர்,பலநூற்றாண்டுகளாக இந்திய–இலங்கை இணைப்புப் பாலமாகவிருந்த ராமர் சேது பகுதியில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
இதன் போது, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புகளின் வகிபாகத்தை நினைவுகூர்ந்ததுடன், இந்திய-இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடைய பிரார்த்தித்ததாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களையும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளையும் உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்தோடு இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளுக்கான அடிக்கல்லை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகர் நாட்டிவைத்தார்.