‘கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கை பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக’ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா தொற்று நிலைமைகள், தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘இலங்கைக்கு மொத்தமாக 28 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற போதிலும் இப்போது வரையில் 1.2 மில்லியன் தடுப்பூசிகளே கிடைத்துள்ளது.
உலகளவில் கொவிட் -19 தடுப்பூசிகளுக்கு பாரிய அளவிலான கேள்வி நிலவுகின்ற காரணத்தால் இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.
இதேவேளை, முதலாவது டோஸாக “ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனகா” தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசியை வழங்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து தொடர்ச்சியாக குறித்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளதெனக் கூற முடியாது. நாளுக்கு நாள் வைரஸ் தன்மைகள் மாற்றமடைகின்றன.
உலகிற்கே இந்த வைரஸ் புதியதாக உள்ள காரணத்தினால் சரியான எதிர்வுகூறல் எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளது.
ஆனால் நாட்டில் வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.