கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நிறைவு செய்யப்படாதுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், குறித்த வீடமைப்புத் திட்டங்கள் இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் பயனாளிகளுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடன் பெற்று, வீட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் உள்நாட்டுப்போரில் அனைத்தையும் இழந்தவர்கள் என்றும் அவர்கள் தமக்கென ஒரு நிரந்தர வீடின்றி, சிறிய குடிசைகளில் வாழ்ந்து வருவதாகவும் செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல அவர்களுக்கான வீடமைப்பு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.