November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதில்

நீதிமன்ற வளாகத்தில் தாய்மார்களுக்கு தமது குழந்தைகளுக்கு பாலுட்டும் வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விடுத்த கோரிக்கைக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நீதி அமைச்சர், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் எனது கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்காக ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு நன்றியை கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையின் ஒரு முக்கியமான விடயத்திற்கு இலங்கையின் நீதித்துறையில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.  எந்தவொரு தாயும் தனது குழந்தையை வளர்க்க வேண்டிய அவசியம் இருப்பதால் நீதிமன்றங்களை அணுகுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் நீதி நிர்வாகத்தில் எந்தவிதமான பாகுபாடும் தடையும் இல்லை என்பதையும், எமது நீதி நிர்வாகத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதை எளிதாக்குவதற்கு நாங்கள் பணியாற்ற வேண்டும் என்பதையும் உறுதியாக கூறுகிறேன் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது இடம்பெற்று வரும் நீதிமன்ற முறைமை சீர்திருத்தங்களில் தாய்மார்கள் தொடர்பிலான விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தமது சட்டத்தரணியுடன் அவர் மன்றில் முன்னிலையானமையினால், பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டது.

ஒன்றரை மாதக் குழந்தையின் தாய் என்பதனால் ஹிருணிகாவினால் சரியான நேரத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைத் தர முடியாது போனதாகவும், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும், இனிவரும் காலங்களில் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவாரெனவும் ஹிருணிகா தரப்பு சட்டத்தரணி உறுதியளித்தார்.

இதற்கமைய, பிரதிவாதியான ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை முன்பிணையில் செல்ல அனுமதித்தார்.

இதனிடையே, வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.