மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்களின் அதிகாரிளுக்கு சம்பள நிர்ணய கட்டளைகள் சட்டத்திற்கு அமைய ஆறு மாத கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட முடியுமென்று தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் அடங்கலாக ஆயிரம் ரூபாவை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் இதில் உள்ளவாறு நடந்துகொள்ள பெருந்தோட்டக் கம்பனிகள் கட்டுப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.