‘சர்வதேச விசாரணைகளை நாடக் கூடாது, எமது உள்நாட்டு விடயங்களை நாம் உள்நாட்டிலேயே தீர்க்க முடியும், எமது விடயங்களை நாமே கையாள முடியும்’ எனத் தெரிவித்தவர்களே இன்று சர்வதேச விசாரணையினை நாடும் அளவுக்கு இந்த அரசாங்கம் அவர்களை ஏமாற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையினைக் கோர முடியுமானால், 2009 இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணையினை கோருவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள் காலத்துக்கு காலம் வந்து போகும் என்பதால் தான் இந்த அரசாங்கத்தையோ அல்லது அந்த அரசாங்கத்தினையோ குறை கூற விரும்பவில்லை என்றும் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றில் ஒத்த விடயங்கள் காணப்படுகின்ற போதிலும், இரண்டு அறிக்கைகளிலும் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே கறுப்பு ஞாயிறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தாக்குதல் நடத்தியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மன்னிப்பு வழங்கியிருந்தாலும், மன்னிப்பின் அளவுக்கு நீதியும் முக்கியமானதே! நீதி இல்லாது இவ்வட்டம் முற்றுப்பெறாது. அதனாலேயே, நீதியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகின்றது.
சஹ்ரான் தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் உட்பட யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தாக்குதல் தொடர்பான முன்னறிவித்தல்கள் கிடைக்கப்பெற்ற நிலையிலும், பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படவில்லை என்று சொல்லுவோமாயின், ஏதோ ஒரு பாரிய தவறு இடம்பெற்றுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் இன்று இலங்கையை தனது மக்களுக்கு நீதியினை வழங்குவதில் தோல்வியுற்ற ஒரு நாடாகவே காண்கிறது என்றும், இது ஒரு தோல்வியடைந்த அரசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.