ஐநா சிறப்பு விசாரணையாளர்கள் 2015 ஆம் ஆண்டின் பின்னரான விஜயத்தைத் தொடர்ந்து முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை மீதான வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலில் பிரிட்டன் இதனை அறிவித்துள்ளது.
ஐநா சிறப்பு விசாரணையாளர்கள் தமது இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைக்கொண்டு வரைவுத் தீர்மானம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான சரத்தை நீக்க வேண்டும் என்று இலங்கை கோரியிருந்த நிலையில், பிரிட்டன் அதனை நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 90 வீதமானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமை தொடர்பில் பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது.
குறித்த அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக விவாதித்துள்ளன.
இதேநேரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய இலங்கை நியமித்துள்ள ஆணைக்குழுவை அங்கீகரிக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.