இலங்கையின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அஷோக அபேசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
‘அவர்களின் திட்டத்திற்கான நிதியுதவியை நிசங்க சேனாதிபதியால் வழங்கப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவரின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி, ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய அஷோக அபேசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அவருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களான உதயன கிரிந்திகொட, பிரமித்த பண்டார தென்னகோன், சஞ்ஜீவ எதிமான்ன, மதுர விதானகே, ஜகத் குமார சுமித்ர ஆரச்சி, மிலான் ஜயதிலக ஆகியோர் முறைப்பாடு செய்திருந்தனர்.