November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல்’; புதிய ஆணைக்குழுதான் இறுதி முடிவெடுக்கும்’

‘உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் எவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் புதிய ஆணைக்குழுதான் இறுதி முடிவெடுக்கும்’ என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையையும், அதிலுள்ள பரிந்துரைகளையும் எதிரணியிலுள்ள பலரும் கண்டபடி விமர்சிக்கின்றனர். இந்த விசாரணை ஆணைக்குழுவை தற்போதைய ஜனாதிபதி நியமிக்கவில்லை. அதை முன்னாள் ஜனாதிபதிதான் நியமித்திருந்தார் என்பதை விமர்சனங்களை வெளியிடுவோர் கவனத்தில்கொள்ள வேண்டும்.

யாரையும் பழிவாங்குவதும், பாதுகாப்பதும் அரசின் நோக்கமல்ல. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

அதேவேளை, விசாரணை அறிக்கையில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் அமுல்படுத்தவும் முடியாது. ஏனெனில் சில குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் எவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் புதிய ஆணைக்குழுதான் இறுதி முடிவெடுக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.