November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீள்பதிப்பு செய்யப்பட்ட இந்துக் கலைக் களஞ்சியம் வெளியிட்டு வைக்கப்பட்டது

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்துக் கலைக் களஞ்சியம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்துக் கலைக் களஞ்சிய உருவாக்கப் பணி 2014 ஆம் ஆண்டில் பன்னிரண்டு தொகுதிகளை நிறைவு செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது மீள்பதிப்புச் செய்யப்பட்ட இந்துக் கலைக் களஞ்சியத்தின் ஆரம்ப பிரதிகள் பிரதமரினால் நேற்று இந்து மதகுருமார்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன், அங்கஜன் ராமநாதன், எம்.ரமேஷ்வரன் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் அதன் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் இந்துக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள ஆலயங்களில், மகா சிவராத்திரி நிகழ்வினை சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்கும் வகையில் பகுதியளவிலான அனுசரணையாக நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

அந்தவகையில், ஐம்பது ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா வீதம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி அக்சராத்மானந்த மகராஜ், சின்மயாமிஷன் சுவாமிகள் குணாதீதானந்த சரஸ்வதி, பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், கலாநிதி க.ரகுபரன், இந்துப் பண்பாட்டு நிதியத்தின் உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.