ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
அபு ஹின்த், லுக்மான் தாலிப், அபு அப்துல்லா, ரிம்சான், சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அடிப்படையாகக் கொண்டே சட்டமா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.