January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஸ்கெலியா ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் பிணையில் விடுவிப்பு!

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க ஹட்டன்  நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஓல்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி தொழிலாளர்கள் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தோட்டத்தின் முகாமையாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 தொழிலாளர்களையும் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதேவேளை அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த அந்த தோட்டத்தை சேர்ந்த மேலும் 12 பேரும் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.