May 25, 2025 22:47:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதத் தடுப்பு விசாரணைகள் அச்சுறுத்தும் வகையில் அமையக் கூடாது’: கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ள நிலையில், குறித்த செயற்பாட்டைக் கண்டித்து பிரதேச சபை அமர்வில் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக உறுப்பினர் ஜீவராசா சபையில் கோரிக்கை முன்வைத்துள்ளதோடு, அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் சபை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் எவரையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தாம் தடை இல்லை எனவும், அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவதாயின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகம் இன்று கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயற்பாடு மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் சபை அமர்வில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரேரணை சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.