July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

‘ஆணைக்குழு அறிக்கையைத் தாண்டிய இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் தொடர்ந்தும் சுதந்திரமாக இருப்பதாக அமைச்சர் விமல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அமைச்சர் விமல் தொடர்ந்தும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதுதொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தானும் சகோதரனும் எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டுடனும் தொடர்புபடவில்லை என்பது பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளதாகவும் ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த விமல் வீரவன்ச, அவற்றை நான் மறுத்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகக் கூறினார்.
விமல் உண்மையைப் கூறுபவராக இருந்தால், இப்போது அவர் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும்”
என்றும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமலின் கருத்துக்கள் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படுபவை என்றும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும் ரிஷாட் கேட்டுக்கொண்டுள்ளார்.