July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மீதான பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டது!

Photo: Facebook/ Hirunika Premachandra

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் டிபென்டர் வாகனமொன்றில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஹிருணிகா பிரேமசந்திர ஆஜராகாத காரணத்தினாலேயே, அவரைக் கைது செய்ய இன்று காலை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர், ஹிருணிகா நீதிமன்றத்தில் ஆஜராகியதால், பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர் அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமசந்திரவோ, அவர் சார்பில் சட்டத்தரணியோ ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு நீதியரசர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, இந்த வழக்கை மீண்டும் ஜுன் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், அதன்போது, பிரதிவாதிகள் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று, அவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தாக ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் அவரின் உதவியாளர்கள் 8 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.