இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார். இரணைதீவு தொடர்பில் சுகாதார அமைச்சு தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.எனவே,
இரணைதீவு தொடர்பில் சுகாதார அமைச்சால் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உறுதிப்படுத்தியிருந்தார்.அத்துடன் அது தொடர்பான சுற்றுநிருபத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பையடுத்து எதிர்க்கட்சி உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினர் பல விமர்சனங்களை முன்வைத்துவந்த அதேவேளை,இரணைதீவு மக்களால் எதிர்ப்பும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.