November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை மனித உரிமை மீறல் அல்ல” : இராஜாங்க அமைச்சர் தயாசிறி

இலங்கையின் உள்ளக விடயங்களில் ஏதேனும் ஒரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு அதன் மூலமாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் முயற்சிக்கின்றார் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழைய சம்பவங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க ஐ.நா ஆணையாளர் முயற்சிக்கின்றார் என்று தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், ஆணையாளரின் அறிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை மனித உரிமை மீறல் என கூறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சிறப்பு தகுதிகள் கொண்ட இராணுவ அதிகாரிகள் இலங்கையின் அரச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை சிவில் நிர்வாகத்தை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொள்ள பல சவால்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இந்த சவால்களைக் குறுகிய காலத்தில் வெற்றிகொள்ளும் வேலைத்திட்டங்களை உருவாக்கி அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் பலப்படுத்துவோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.