July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பிகை உண்ணாவிரதம் – ”தியாகிகளின் மரணத்தை சர்வதேசம் விரும்புகின்றதா?”

லண்டனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் அம்பிகை செல்வகுமாரின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் சர்வதேசம் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென்று  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மு.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி யாழ். நல்லூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘தமிழ் மக்களுடைய நீண்ட கால போராட்டமானது அரசியல் சார்ந்தது. இந்த போராட்டத்தை தெற்கின் அரசாங்கம் பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து பல்வேறு அழிவுகளை செய்தது மட்டுமல்லாமல் இன அழிப்பினை மேற்கொண்டதாகவும் இந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என்றும் அருட்தந்தை சத்திவேல்  குறிப்பிட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டில் தியாகி திலீபன், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு தமது பிரச்சனையை தீர்க்குமாறு வலியுறுத்திய போது, அதற்கு தலைசாய்க்காத இந்தியா தற்போதும் அவ்வாறே நடந்துகொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று சர்வதேச நாடுகளும் எமக்கு எதிராக இருக்கின்றனவா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், ஏனெனில் தற்போதைய ஐநா தீர்மானம் எமக்கு சார்பானதாக இல்லை எனவும் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘லண்டனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் அம்பிகை செல்வகுமார் கோரிக்கையை ஏற்றாவது சர்வதேச நீதியை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகை செல்வகுமார் உயிர்நீப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது என்றால், அவரின் பின்னால் வருவதற்கு பலர் ஆயத்தமாக உள்ளார்கள் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் சத்திவேல் தெரிவித்துள்ளார்.