July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். சென். ஜோன்ஸ் அணியை வென்றது கல்கிசை சென். தோமஸ் அணி

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற வணக்கத்திற்குரிய ஏ.ஜே.சி. செல்வரத்தினம் ஞாபகார்த்த கேடயத்துக்கான 10 ஆவது கிரிக்கெட் போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் புனித தோமஸ் கல்லூரி அணி ஏ.ஜே.சி. செல்வரத்தினம் சவால் கேடயத்தினை 6 ஆவது தடவையாக வெற்றிகொண்டது.

நேற்று புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோமஸ் அணியின் தலைவர் சலின் டி மெல், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி, களமிறங்கிய புனித தோமஸ் கல்லூரி அணி வீரர்கள் முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவ்வணி சார்பாக மத்திய வரிசை வீரர்களான வினூஜ விஜேபண்டார 71 ஓட்டங்களையும், செனேஷ் ஹெட்டிஆராச்சி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் இளம் வீரர் ஜே. அநாத்ஷ்  3 விக்கெட்டுக்களையும், டினோசன் மற்றும் சரான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை ஆரம்பமானபோது, புனித தோமஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு சென். ஜோன்ஸுக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் வழங்கியது.

இதனையடுத்து, களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 20.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணித் தலைவர் டினோசன் மாத்திரம் அதிகபட்சமாக 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் மனித் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரயன் 2 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், கனிஸ்டன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் புனித தோமஸ் கல்லூரி அணி சார்பாக கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 33 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக வினோஜன் 34 ஓட்டங்களைப் பெற, தமிழ்கதிர் 2 சிக்ஸர்கள் அடங்களாக 25 ஓட்டங்களை பெற, சங்கீர்தனன் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

புனித தோமஸ் கல்லூரியின் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மனித் 60 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, இந்தப் போட்டியில் மொத்தமாக 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி, அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்கை வழங்கியிருந்தார்.