அரசாங்கம் சமர்ப்பிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் சாட்சியங்கள் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.
சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ள ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் சாட்சியங்கள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல், அரச நிறுவன ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை சபை முதல்வரான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று சபைப்படுத்தினார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த இரண்டு அறிக்கைகளினதும் சாட்சி அறிக்கை தமக்கு அவசியம் என தெரிவித்தார்.
இந்த இரண்டு அறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாயின் அதற்கு சாட்சியங்கள் தேவை எனவும் குறிப்பிட்டார்.
அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் சாட்சியங்களும் எமக்கு பெற்றுத்தர வேண்டும் என்றார்.
நாளை பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் சாட்சியங்கள் இல்லாது தம்மால் விவாதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபருக்குக் கூட முழுமையான சாட்சியங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் அவர் எப்படி வழக்கு தொடர முடியும் எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.