(FilePhoto)
அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்திலேயே இந்த முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இராதாகிருஷ்ணன் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார். .
இராணுவத்தைக் கொண்டு வடக்கு – கிழக்கு மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதைப் போலவே மலையகத்திலும் குழப்பங்களை ஏற்படுத்தி அடக்குமுறைகளை முன்னெடுக்க அரசாங்கத்தின் அனுமதியுடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிலாளர்களுக்கும் தோட்ட நிருவாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹோல்டன் தோட்டத்தில் தொடர்ச்சியாக 32 ஆவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த போராட்டம் தொடர்பாக 8 பெண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக போராட்டங்கள் நடக்கும் நிலையில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தோட்ட ஆலோசகர்களாக நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும், இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவ ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது எனவும், வடகிழக்கு மக்களையும் இராணுவ அடக்குமுறைக்கு உட்படுத்திய காரணத்தினாலேயே அங்கு யுத்தம் உருவானதாக அவர் அந்த விவாத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயற்பாடுகளை தவிர்த்து சுதந்திர, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சனைகளுக்கு அனைவரும் முகங்கொடுக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.