July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவரெலியா பிரீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனானது கொத்மலை கிங்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ரேஹா ஸ்டீல் கிண்ணத்துக்கான நுவரெலியா பிரீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொத்மலை கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவிகரித்தது.

இந்த சுற்றுப் போட்டியில் கொத்மலை கிங்ஸ், மஸ்கெலிய சன்ரைசர்ஸ், ஹங்குராங்கெத்த டஸ்கர்ஸ், நுவரெலிய க்ளடியேட்டர்ஸ், வலப்பனே நைட் ரைடர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்குபற்றியதுடன் நுவரெலியா கிரிக்கெட் சங்கத்தில் அங்கும் வகிக்கும் கிரிக்கெட் கழக வீரர்கள் மாத்திரமே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி, ஐந்து அணிகள் பங்குபற்றிய இந்தப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி ரதல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மஸ்கெலிய சன்ரைசர்ஸ் அணி, 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொத்மலை கிங்ஸ் அணி, செல்வராஜா நவீணனின் அபார துடுப்பாட்டம் மற்றும் சந்தன வசன்த பண்டாரவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதேவேளை, இறுதிப் போட்டியின் சிறப்பு அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா, உதவித் தலைவர் ரவின் விக்ரமரட்ன, ரேஹா ஸ்டீல் உரிமையாளர் எஸ். திருச்செல்வம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், நுவரெலிய மாவட்ட கிரிக்கெட் ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவரும், அமைச்சருமான சீ.பி. ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றயீட்டியவர்களுக்கு பதக்கங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

இதன்படி, சம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 150,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. அத்துடன், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அணிக்கு 100,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.