January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மேற்கு முனையம்: ‘இந்திய அரசின் ஈடுபாடு இன்றியும் அதானி நிறுவனத்துடன் அபிவிருத்தித் திட்டம் தொடரும்’

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் ஈடுபாடு இன்றியும், அதானி நிறுவனத்துடன் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை உறுதிபூண்டுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த முத்தரப்பு உடன்படிக்கையில் ஜப்பானின் நிலைப்பாடு குறித்த தகவல்கள் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தின் தகவல்களில் தவறிருப்பதாக இந்திய தூதரகம் சட்டிக்காட்டியிருந்தது.

இதற்குப் பதலளித்த இணை அமைச்சரவைப் பேச்சாளர், “கிழக்கு முனையத்துக்கு இந்திய தூதரகம் அதானி நிறுவனத்தைப் பரிந்துரைத்த காரணத்தினால், மேற்கு முனையத்துக்கும் அதானி நிறுவனம் பரிந்துரைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அனுமானித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மேற்கு முனையம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.