சம்பந்தன் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் இலங்கையில் மாத்திரமல்ல தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் இத்தனை பிரச்சினைகள் இருக்கும் போது திருகோணமலைக்குச் சென்று இவர் கூட்டம் நடத்த வேண்டுமா? எனவும் கேட்பார்கள். அரசியல் என்றால் அப்படித்தான் கதைப்பார்கள். ஆனால் நாம் எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து மாத்திரமே செயற்ட வேண்டும். அவ்வாறிருக்கையில் கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் விடயங்கள் தொடர்பில் எங்கு சென்றும் கலந்துரையாட நான் தயராக இருக்கின்றேன். அதன் முதற்கட்டமே திருகோணமலைச் சந்திப்பு.
சம்பந்தன் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் இலங்கையில் மாத்திரமல்ல தெற்காசியாவிலேயே இல்லை. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் பயணிப்பது அனைவருக்கும் பெருமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளினால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் தமிழ் தேசிய அரசியல் போக்கினை மீளக் கட்டியெழுப்புதல், திருகோணமலையில் தமிழர்களின் இருப்பினை பாதுகாத்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் தொடர்ந்தும் இவ்வாறான சந்திப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பது தொடர்பிலும் பலதரப்பட்ட விடயங்களை ஆராய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.