July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச காணிகளை வைத்திருந்த குடும்பங்களுக்கு ஜனாதிபதி தலைமையில் உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

தெளிவான காணி உரிமை பத்திரமின்றி அரச காணிகளை தம்வசம் வைத்திருந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.

“சுபீட்சத்தின் நோக்கு”என்ற கொள்கை திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிக்கல் இல்லாத காணி உரிமையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் அரச காணிகள் கட்டளைச் சட்ட ஏற்பாடுகளின் கீழ், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் சட்டபூர்வமாக தெரிவுசெய்யப்பட்ட 20,000 பேருக்கு முதல் கட்டமாக உரிமை பத்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட குறைந்த வருமானம் பெறுபவர்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளனர்.காணி உரிமையை வழங்குவதன் மூலம் அவர்களின் வருமான மட்டத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

உரிமைப் பத்திரங்களை பெறுபவர்கள் தங்களுடைய காணிகளில் வீடொன்றை கட்டுவதற்கும், விவசாய நோக்கங்களுக்காகவும் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். காணி உரிமையைப் பெறுபவர்கள் பயனுள்ள காணிப் பயன்பாட்டின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் வழங்கப்படும் இந்த உறுதிப்பத்திரம் அறுதி உறுதிப் பத்திரமாக கருதப்படும். பயனாளிகளுக்கு அதனை பிணையமாக வைத்து வங்கிக் கடனொன்றை பெற்றுக்கொள்ளவும் முடியும் . மேலும்,இந்த ஆண்டு இறுதிக்குள் 100,000 உரிமை பத்திரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில், அனைத்து மாகாணங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 பேருக்கு ஜனாதிபதி காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

ஜனாதிபதி அலுவலகம், காணி அமைச்சு மற்றும் மகாவலி அமைச்சு இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன.

This slideshow requires JavaScript.