October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பொருளாதாரம் 10 ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது என்கிறார் ரணில்

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பு 10 ஆண்டுகள் ஆகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவைத் தவிர்க்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.

அத்தோடு 1977 க்குப் பிறகு திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்திகளை இழக்க நேரிடுகின்றமை தமக்கு கவலை அளிப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

கடன்களைச் செலுத்துவதற்கும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் தமது ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சிதைவடைந்துள்ளமை வருத்தம் அளிப்பதாக விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“எமது அரசாங்கத்தின் போது நாங்கள் ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தோம். நாங்கள் சுகாதார சேவைகளை மேம்படுத்தினோம்” என்றார்.

“வணிக நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதால் அவை ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. இது 2022 ஆம் ஆண்டிலும் தொடரும்” என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை குடும்பங்களை மேலும் துன்பத்தில் தள்ளும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஊடகங்கள் உட்பட யாரும் பேசுவதில்லை என தெரிவித்த அவர்  அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதால் பேசுவதற்கு மறுப்பதாகவும் தெரிவித்தார்.