இலங்கையில் ‘நான் கண்காணிக்கப்படுகின்றேனா?’ என்று இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டே, அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.
இலங்கைக்கான பங்களாதேச தூதுவருடன் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான தகவல்கள் கொழும்பு ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய தூதுவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்தியில் கனேடிய மற்றும் பிரிட்டன் தூதுவர்கள் இலங்கைக்கு எதிராக ஐநா உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தென் கொரிய தூதுவரைச் சந்தித்ததும், ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Am I under surveillance? #SriLanka https://t.co/jvnmuq3jyP
— David McKinnon (@McKinnonDavid) March 6, 2021
தனிப்பட்ட இரண்டு சந்திப்புகள் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், “தாம் இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றோமா?” என்ற சந்தேகம் தூதுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தகவலை மறுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, “இலங்கையில் தூதுவர்கள் அவ்வாறு கண்காணிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் 46 ஆவது ஐநா அமர்வில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.