July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திறமையான வீரர்களை இனங்காண வட மாகாணத்துக்கும் கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இலங்கையில் அனைத்து வயதுப் பிரிவையும் உள்ளடக்கியதாக நாடு பூராகவும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் நோக்கில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், மாவட்ட மற்றும் மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வயதுப் பிரிவினர்களையும் அடையாளம் காண்பதே இந்த ஒருங்கிணைப்பாளர்களின் முக்கிய பொறுப்பாகும்.

இதன்படி, மாவட்ட மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்கள், பாடசாலை பயிற்சியாளர்கள், கிரிக்கெட் பொறுப்பாசிரியர்கள் மற்றும் அதிபர்களுடன் இணைந்து வீரர்கள் மற்றும் வீரர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு தேசிய மட்டத்துக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.

கடந்த 2017 மற்றும் 2018 இல் நான்கு ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆரம்பமாகிய இந்த வேலைத்திட்டமானது, 2020 இல் ஆறாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், இவ்வருடம் நாடு பூராகவும் இந்த வேலைத்திட்டத்தை வியாபிக்கும் நோக்கில் 12 ஒருங்கிணைப்பாளர்களை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

இதனிடையே, மாகாண ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், உள்ளூர் கிரிக்கெட் பிரிவின் தலைவர் சிந்தக எதிரிமான்னே, பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலக் வட்டுஹேவா மற்றும் அதன் செயலாளர் கமல் இந்திரஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வரலாற்றில் முதல்தடவையாக வடக்கு மாகாணத்தில் உள்ள இளம் வீரர்களை இனங்காணும் நோக்கில் வீ. ஹஜீபன் கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளராக இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஒருங்கிணைப்பாளர்கள் விபரம்

  • மலிக் கீர்த்தி பெர்னாண்டோ – மேல் மாகாணம் (வெளிப் பகுதிகள்)
  • சமன் ஹெட்டியாரச்சி – மேல் மாகாணம் (வடக்கு)
  • கனிஷ்க பெரேரா – மேல் மாகாணம் (மத்தி)
  • டி.எம் ராஜரத்ன – மேல் மாகாணம் (தெற்கு)
  • சுராஜ் சன்ஜீவ – மேல் மாகாணம் (வடக்கு வெளிப் பகுதிகள்)
  • லீலானந்த குமாரசிறி – தென் மாகாணம்
  • சிசிர வீரசிங்க – ஊவா மாகாணம்
  • இந்திக ஹெட்டியாரச்சி – கிழக்கு மாகாணம்
  • நுவன் சமரனாயக்க – மத்திய மாகாணம்
  • கீர்த்தி குணரட்ன – வட மத்திய மாகாணம்
  • ஏ.எம்.ஏ.பி அத்தபத்து – வட மேல் மாகாணம்
  • வீ. ஹஜீபன் – வடக்கு மாகாணம்