ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை விளக்கமற்றது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பிரதான குற்றவாளிகள் யார் என்ற உண்மைகளை ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்க தவறியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தனது நிலைப்பாட்டிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் யார்? அவருடன் நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் யார்? ஐ.எஸ் அமைப்புடன் எவ்வாறு இவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தினர், இந்த தாக்குதலின் பின்னணி என்ன, போன்ற விடயங்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் வெளிவரும் என்று தான் நினைத்திருந்ததாகவும் ஆனால் அந்த அறிக்கையில் அவ்வாறான தகவல்கள் எதுவும் இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சம்பவத்திற்கு முன்னரே கிடைத்ததாக கூறப்படும் இந்திய புலனாய்வுத் தகவலை என்னிடம் அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலை தடுத்திருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் நான் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டதனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது மணித்தியாலங்களுக்குள் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலரையும் கைது செய்யவும், நிலைமைகளை கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவரவும் முடிந்தது என்றும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துரிதமாக செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரியப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.