January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் ஊட்டுகின்றது புதிய வரைபு’

இலங்கையில் கூண்டோடு அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த பிரேரணையின் புதுப்பிக்கப்பட்ட வரைபு வெளியாகியுள்ளது. எனவே, இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய நகல் வரைபின் உரையின் மொழியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் புதுப்பிக்க வரைபு சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்த தமிழ் மக்களின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் காணப்படவில்லை. எனினும், இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவுக்கு ஓரங்கட்டப்படுவது, சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது – அச்சுறுத்தப்படுவது, ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், போரால் உயிரிழந்தவர்களைப் பொதுமக்கள் நினைவுகூருவது மீதான கட்டுப்பாடுகள் – நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகள் ஆகியன புதிதாக இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறையை திணிக்க முடியாது என்பதை பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணைக்குச் சொந்தமான நாடுகள் புரிந்துகொண்டுள்ளன.

எனினும், குறித்த நாடுகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் நினைவுத்தூபிகளை நிறுவுதலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதற்கு ஒப்பானது.

வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளை நினைவேந்தியே மே, நவம்பர் மாதங்களில் பகிரங்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நினைவுத்தூபிகளும் அவர்களுக்காகவே நிறுவப்படுகின்றன. இவையெல்லாம் எமது புதிய ஆட்சியில் இடம்பெற அனுமதி இல்லை.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் போரின்போது புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர். பொதுமக்கள் எவரும் காணாமல்போகவில்லை. இதைப் பிரேரணை வரைபுக்குச் சொந்தமான நாடுகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.