October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேவையற்ற போராட்டங்களை தமிழ் மக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான அரசு அல்ல. இந்நிலையில், அரசுக்கு எதிராகவும், அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையிலும் ஐ.நா.விடம் நீதி கோரி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஐ.நா.வோ அல்லது சர்வதேச நாடுகளோ தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது. எனவே, தேவையற்ற போராட்டங்களை தமிழ் மக்கள் உடனே நிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போரின்போது தமிழ் மக்களுக்கு அநீதிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கான தீர்வுகளை அரசுதான் வழங்கும். அதைவிடுத்து நாட்டின் சட்ட திட்டங்களை மீறி ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் அமைப்பினரும் செயற்படுகின்றனர்.இரு தரப்பினரும் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்குகின்றனர்.அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பதை தமிழ் மக்கள் உடன் நிறுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.