மட்டக்களப்பில் கடந்த வாரம் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், நகைச்சுவைக் கூட்டமுமாகவே இருந்ததாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
“மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தாது, அரசாங்கம் தரும் நிதியை தங்களால் வழங்கப்பட்ட நிதியாக காட்டிக் கொள்வதற்கான முயற்சியாகவும், தங்களுடைய அரசியலை வளர்த்துக் கொள்வதற்கான கூட்டமுமாகவே இது மாற்றப்பட்டிருந்தது” என்றார்.
மட்டு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் அந்த கூட்டங்களில் நடந்த விடயங்ளை வைத்து அவை நகைச்சுவைக் கூட்டங்கள் என்றே கூறவேண்டும் என இரா.சாணக்கியன் கூறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியினை உரிய அதிகாரிகள் பொருத்தமான இடங்களுக்கு பகிர்ந்த விடயங்களை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற ரீதியில் ஒருவர் இருந்து அனுமதி வழங்கியது மாத்திரமே அதில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்த நாங்கள் பல விவாதங்களை மேற்கொண்டும் அவற்றுக்கான எவ்வித தீர்மானங்களும் அக்கூட்டங்களில் எடுக்கப்படவில்லை” என்றார்.
“சில கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுமதிக்கப்படவில்லை எனவே நடைபெற்றது ஒரு அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்ல முடியாது இது நேரத்தை வீணடிக்கின்ற கூட்டமாகவே எங்களுக்குத் தெரிகின்றது” எனவும் சாணக்கியன் கூறினார்.
இலங்கைத் தமிழர்கள் என்ற வகையில் இலங்கைக்கு எதிரானதொரு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் வாக்களித்து கொண்டு வர வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சிக்க வேண்டும் என சாணக்கியன் தெரிவித்தார்.
ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை எவ்வாறாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு எதிரானது என்பதை விட மனித உரிமை மீறலுக்கு எதிரானது என்பதையே தாம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கொரோனாவால் உயிரிழக்கும் சிறுபான்மை இனத்தவரின் உடலங்களை அடக்கம் செய்வதை வைத்து மீண்டும் தமிழ் முஸ்லீம் உறவைப் பிரிக்கும் முகமாகவும், ஒற்றுமைகளைப் பாதிக்கும் வகையிலும் இரணைமடுப் பிரதேசம் தொடர்பான சில தீர்மானங்களை அரசு எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.