July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா வரைவின் வடிவமே தெரியாமல் ஆதரிப்பது நீதிக்கான போராட்டத்தை பலமிழக்கச் செய்வதாகும்’: கூட்டமைப்புக்கு டெலோ பதில்

ஐநா பேரவையின் இறுதி வரைவின் வடிவமே தெரியாமல், இருக்கின்ற வரைவை பிரேரணையாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளைக் கோருவது தமது முயற்சியை பலமிழக்கச் செய்வதாகும் என்று டெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உரைக்குப் பதில் அளித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை சம்பந்தமாகவே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அறிக்கையில் கூட்டமைப்பாக டெலோ தலைவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தபோதிலும், தமது பரிசீலனைக்காக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் செயற்பாடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், மக்களின் நீதிக்கான போராட்டத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்வதாகவும் அமைந்துள்ளதாக டெலோ சுட்டிக்காட்டியுள்ளது.

மாதிரி வரைபில் தமது கோரிக்கைகள் உள்வாங்கப்படாமலும், முன்னைய பிரேரணைகளில் இருந்த உறுதியான பல சரத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதையும் தாம் அவதானித்ததாகவும், இந்த அறிக்கைக்கு ஒருபோதும் இணங்க மாட்டோம் என்றும் டெலோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதே, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி நிற்கும் மக்களுக்கான கடமையாகும்.

தவிர அரச பிரநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது.”

என்றும் டெலோ அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது.