கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்த அரசாங்கம் தமது கடமைகளை சரிவர செய்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சி.சந்திரகாந்தன்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஐந்து வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை பேத்தாழையில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எதிரணியில் இருக்கும் போது எதுவும் கதைக்க முடியும். அதனைத்தான் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்கின்றார்கள். கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் அரசாங்கம் தமது கடமைகளை சரியாக செய்து வருகின்றது’ என்றார் பிள்ளையான்.
“கடந்த அரசாங்கம் வீட்டுத்திட்ட கிராமங்களை உருவாக்கியது. அதில் பல குறைபாடுகள் காணப்பட்டன. வசதி படைத்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக முறைப்பாடுகள் காணப்படுகின்றன.
ஆனால் இந்த அரசாங்கம் குடிசை வீடுகளில் உள்ளவர்களை இனங்கண்டு வீடுகளை வழங்கி வருகின்றது. எனது மாவட்டத்தில் குடிசை வீடுகள் இருக்கக் கூடாது என்று ஆசைப்படுகின்றேன். இதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்” எனவும் பிள்ளையான் தெரிவித்தார்.