July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை அடையாளம் காணும் வரை போராட்டம் தொடரும்” – பேராயர் மெல்கம் ரஞ்சித்

Black Sunday

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் காணும் வரை ஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகக் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி இன்றைய தினத்தை ‘கறுப்பு ஞாயிறு’ ஆக அனுஷ்டிக்கக் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் முன்பு இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

“நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்களை ஆணைக்குழு கண்டுபிடிக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம்” என கூறினார்.

ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் படித்து வருவதாக தெரிவித்த பேராயர் அதில் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல வியங்களைச் செயல்படுத்த முடியும் என்றார்.

நேர்மையான விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஆறு பேர் கொண்ட குழுவை நியமிப்பது அவசியமில்லை, ஜனாதிபதி நேரடியாக இதில் தலையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என்பதையே தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

“தாக்குதலுடன் தொடர்புடைய சிலரை மட்டும் தண்டிப்பது தவறு. அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என பேராயர் மேலும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் காண அரசாங்கம் ஒரு நம்பிக்கையான திட்டத்தை முன்வைக்கும் வரை நாட்டின் ஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.