January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஐசிசி விசாரணை வேண்டும்”: யாழில் 8 ஆவது நாளாக உணவு-தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) பாரப்படுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சிமுறை உணவு-தவிர்ப்பு போராட்டம் 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ். நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக ‘இலங்கையில் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுதர வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வலியுறுத்துகின்றனர்.

இந்த சுழற்சிமுறை உணவு-தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா-மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.