January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை சாத்தியமில்லை”: பிரிட்டன் பதில்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பாரப்படுத்துமாறு 13,500க்கும் அதிகமானோரின் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு ஐநா பாதுகாப்பு பேரவையில் “போதிய ஆதரவு கிடைக்காது” என்ற காரணத்தை பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ஐசிசி) நிறுவிய ரோம் சமவாயத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டிஷ் அரசு, ஐநாவின் பாதுகாப்பு பேரவை ஊடாக மாத்திரமே இலங்கையை அந்த நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த முடியும் என்றும் அதனை பேரவையின் உறுப்புநாடுகள் மறுப்பாணை (veto) அதிகாரம் மூலம் புறந்தள்ளி விடக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கையின் பொறுப்புக்கூறலையும் அங்கு நிலைமாறு-நீதியையும் உறுதிப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பில் இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.

“எல்லா பாரதூரமான மனித உரிமை மீறல்களையும் சர்வதேச சட்ட மீறல்களையும் விசாரித்து வழக்குத் தொடருமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருவோம். இலங்கையில் இழைக்கப்பட்ட எல்லா உரிமை மீறல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பரந்துபட்ட பொறுப்புக்கூறல் அவசியம் என்பதை வலியுறுத்துவோம்” என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பாரப்படுத்துமாறு 2018 இல் விடுக்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கும் பிரிட்டன் இதே பதிலை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் இந்த பதில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் கொடூரங்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதியை பிரேரிப்பதிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டுள்ளமையை  இட்டு ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்று இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பேர்ள் (PEARL) அமைப்பின் இயக்குநர் டாஷா மனோரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவையில் உள்ள நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்பதற்காக, ஐசிசிக்கு இலங்கையை பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டன் புறந்தள்ளியிருப்பதை ஏற்கமுடியாது என்று டாஷா மனோரஞ்சன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் உள்ள கடப்பாட்டை உறுதி செய்வதற்காகவும் இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையின்றி நடமாடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கடுமையான செய்தியை இலங்கைக்கு பிரிட்டன் இதன்மூலம் அனுப்பியிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அந்நாட்டின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரிட்டன் தலைநகர் லண்டனில் அம்பிகை செல்வக்குமார் ஆரம்பித்த ‘சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்’ 9 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.