October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பின் வரைபை இம்மாத இறுதியில் நீதி அமைச்சரிடம் கையளிக்க ஏற்பாடு

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைபு இம்மாத இறுதியில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பை ஆராய்வதற்கான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழு 6 மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், இக்குழு அதன் முதல் அறிக்கையை இம்மாத இறுதிக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது.

அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் குழு கடந்த ஆறு மாதங்களில் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மேற்படி அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களை உள்வாங்கி, தயாரிக்கப்பட்டு வரும் ஆரம்ப வரைபு நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவின் பதவிக் காலமும் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரைபை நீதி அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியுடன் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.