July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்கத்தை பேணுவதில் இலங்கை அதிக அக்கறை கொண்டுள்ளது’

நாட்டை ஒன்றிணைத்து அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுவதில் இலங்கை அதிக அக்கறை கொண்டுள்ளது என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நேர்காணலில் மேலும் கருத்து தெரிவித்த அவர்;

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கொலம்பகே, இந்த அறிக்கை நிழல் அறிக்கை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்;

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை கொண்ட பல நாடுகள் உள்ளன. அவர்கள் இராணுவத்தில் பணியாற்றியதால், அவர்கள் தங்கள் நாட்டுக்கு வேலை செய்வதை தடுக்கக்கூடாது.

அரசாங்க பதவிகளில் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளில் 25 பேர் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா இலங்கையில் உருவான காலத்திலிருந்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தெளிவான ஆணையுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். இலங்கை மூன்று தசாப்தங்களாக வன்முறை ஆயுத மோதலால் பேரழிவிற்குள்ளான நாடு.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,முன்னைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் விளைவாகவே மத தீவிரவாதிகள் தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் குறிவைத்து தங்கள் ஈனச்செயலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகம் இலங்கையில் குறிவைக்கப்பட்டது என்று சொல்வது தவறு.ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது இலங்கையில் நடந்த மிக அழிவுகரமான தாக்குதல்களாகும்.

அதேபோல் , அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை ஆதரிக்க இந்தியா வலியுறுத்துவதற்கும் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.