ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் “சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கட்டுவபிட்டி தற்கொலை குண்டு தாரியின் மனைவி என்று அறியப்படும் சாரா சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் போது உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் போது 11 பேர் இறந்துள்ள போதும் அவர்களின் 10 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
சடலங்களை வெளியில் எடுத்து, சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளை சடலங்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாரா இந்தியாவுக்குத் தப்பி ஓடியுள்ளாரா, அல்லது இறந்துவிட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பி தலைமறைவாகியுள்ளாரா என்பதை தீர்மானிக்க தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.