July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எமது அரசாங்கம் தண்டனை வழங்கியே தீரும்”

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்தார்.

எனினும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளை தாம் நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே 2019 இல் மீண்டும் குண்டுகள் வெடித்தன என ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அப்போதைய அரசாங்கம் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நல்லாட்சி அரசாங்கம் 2015 க்கு முன்னர் நடைமுறையில் இருந்த பாதுகாப்புத் திட்டத்தை பின்பற்ற தவறியமையும் தேசிய பாதுகாப்பில் தளர்வான அணுகுமுறை மற்றும் திறமையின்மையுமே ஏப்ரல் 2019 தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணிகளாகும் என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது அவர்களுக்கு பொறுப்பு இல்லாதது போன்று கருத்து வெளியிடுகின்றனர். தாம் ஆட்சியில்  மரணதண்டனையை பெற்றுக்கொடுப்பதாகவும் கூறுகின்றார்கள்.  ஒரு அரசினால் எவ்வாறு மரணதண்டனை வழங்க முடியும் அதனை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றமே எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

2019 செப்டம்பரில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு யார் குற்றவாளி என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனவரி மாதமே தமக்கு ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தது என தெரிவித்த ஜனாதிபதி தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் பொறுப்பை தற்போதைய நிர்வாகம் ஏற்கும் என்றும் உறுதியளித்தார்.

இதேவேளை, 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு நீதி வேண்டி நாளைய தினம் “கறுப்பு ஞாயிறாக” அனுஷ்டிக்கும்படி கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.