November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” – யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் வி.முத்துசாமி வெளியிட்டுள்ளார்.

இந்தக்ககட்சி அரசியலை முன்னிலைப்படுத்தாது அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள் எனவும் கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.

“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி”, ஆங்கிலத்தில் “ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி” என்றும் சிங்களத்தில் “ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய” என்று அழைக்கப்படும்.

தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்பட்ட போதும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே அவை செயற்படுவதாக முத்துசாமி கூறினார்.

“இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி” மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் அவர்களின் கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்படுத்துவதற்காக செயற்படவுள்ளது என கட்சியின் தலைவர் கூறினார்.

இந்த கட்சியின் சேவை  மதம் சார்ந்த சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ள பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும் என்றார்.

எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்பட உள்ளதாக அதன் தலைவர் வி.முத்துசாமி தெரிவித்தார்.

இதேவேளை சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இந்தியாவின் “பாரதிய ஜனதா கட்சி” குறித்து சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.