November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடும்போக்கு சிங்களவர்களை திருப்திப்படுத்தவே ஜனாஸா விவகாரம் பயன்படுத்தப்பட்டது என்கிறார் சுமந்திரன்

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தமிழ் மக்கள் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு இந்த இரணைதீவு மக்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் சான்றாக அமைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரணைதீவு பகுதியில் குடியேறிய மக்களுக்கு வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் கூட இல்லை வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்தும் பல முயற்சிகளை நாங்கள் பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான பிரச்சனைகளும் இல்லை உலக நாடுகளிலேயே தொற்று காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழப்பர்கள் உலகில் 188 நாடுகளில் புதைப்பதற்கான அனுமதிகள் கொடுத்திருந்த போதும் இதனை ஒரு இனவாத செயலாக இலங்கை அரசாங்கம் தடுத்தது எனவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறான இனவாத போக்கை கொன்டிருந்த இலங்கை அரசு ஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவாக இருந்த பல முஸ்லிம் நாடுகள் எதிராக வாக்களிக்கும் அல்லது விலகி விடும் என்ற காரணத்தினால்தான் ஜனாஸாவை அடக்கம் செய்யும் எண்ணத்தை திடீரென மாற்றிக் கொண்டது எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.