(Photo : Army.lk)
இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோசை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றார்.
தொற்றுநோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் 62,000 இற்கும் மேற்பட்ட முப்படையினர் நாடு முழுவதிலும் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னரே இவர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் வைத்து இவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் வருகை தந்திருந்தார்.
கொவிட் 19 தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் முப்படையினருக்காக மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜனவரி 29ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் அதிக ஆபத்துள்ள பகுதியில் உள்ளவர்களுக்கும் சீரம் நிறுவனத்தின் “ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா” தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியா இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. அதை தொடர்ந்து மேலும் 500,000 தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு யுனிசெப் அமைப்பின் மூலம் 264,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு பிரிவு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.