November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசமாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம்’

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சம்பள நிர்ணய சபை 1000 ரூபா விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்ட துறைமார் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘இதன் பிரதிபலிப்பாக தற்போது ஹய்போரஸ்ட் மாகுடுகல தோட்டத்தில் 6 இராணுவ வீரர்கள் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மகுடுகல தோட்ட நிர்வாகத்திடம் வினவியதற்கு தமக்கு அது குறித்து தெரியாது என்கின்றனர். இவ்வாறு இராணுவத்திடம் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைப்பது பூதாகரமானது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை கொண்டு வந்ததன் மூலமே யுத்தம் ஏற்பட்டது.

ஆகவே தொழிலாளர்களை நசுக்க கம்பனிகளும் அரசாங்கமும் முற்படுகிறதா? என்ற சந்தேகமுள்ளது. எனவே அரசாங்கம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் போராட்டம் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தற்போதைய நிலையில் 1000 ரூபாவை கொடுத்து ஏனைய நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கை வைத்தால் மலையகத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.