அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவுக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை, இளைஞன் ஒருவன் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக இன்று முன்னெடுத்துள்ளார்.
பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டத்தை 2 ஆவது நாளாக இளைஞன் ஒருவரின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் மறுவடிவமாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுவிஸ் நாட்டில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்திலும் தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இளைஞன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.