July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: கொழும்பு பேராயரின் ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா ஆதரவு

file photo: Twitter/ ACJU

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பு பேராயரால் நாளை ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அப்பாவி வழிபாட்டாளர்கள் மீது உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சகல மக்களுடனும் தாம் வருத்தத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களின் விளைவாக இலங்கையில் அனைத்து இன, மத மக்களுடனும் சமாதானமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் அன்னியப்படுத்தப்பட்டவர்களாகப் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களால் இலங்கை முஸ்லிம்களின் அடையாளங்களும் உரிமைகளும் கேள்விக்கு உட்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.