July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் இராணுவத்தைப் பாதுகாப்போம் என்கிறார் காமினி லொக்குகே

இலங்கைக்கு எதிராக ஐநாவில் எத்தனை பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும், இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் இராணுவத்தினரைப் பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தமது அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும், தாம் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் முழுமையற்ற அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்களும் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பான பொறுப்பை இந்த அரசாங்கத்தால் ஏற்கமுடியாது என்றும் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.